search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறை விதிமீறல்"

    சசிகலா எந்த சிறை விதிமீறலிலும் ஈடுபடவில்லை என்று சசிகலாவின் வக்கீல் அசோகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறினார். #Sasikala
    பெங்களூரு:

    சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்று சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ளனர்.

    இந்த நிலையில், சசிகலா சிறை அதிகாரிகளுக்கு ரூ. 2 கோடி பணம் கொடுத்து தனி அறைகள், தேவைப்படும் போதெல்லாம் ஷாப்பிங், வேலைக்கு ஆட்கள் என்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக சிறைத்துறை அதிகாரியாக இருந்த பெண் டி.ஐ.ஜி. ரூபா குற்றம் சாட்டினார்.

    இதையடுத்து சசிகலா வெளியே சென்று ஷாப்பிங் செய்து விட்டு, சிறை கைதி உடையின்றி சாதாரண உடையில் உள்ளே வருவது போல் சி.சி.டி.வி. வீடியோ காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பின்னர், இதுகுறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழு விசாரணையை முடித்து கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அரசிடம் அறிக்கையை வழங்கியது. ஆனால், அரசு அந்த அறிக்கையை இன்னும் முழுமையாக வெளியிடவில்லை.

    அந்த அறிக்கை, சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அதில் சசிகலாவுக்கு பல சொகுசு வசதிகள் அளிக்கப்பட்டது, உண்மைதான் என்று கூறப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில், சசிகலாவின் வக்கீல் அசோகன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சசிகலா எந்த சிறை விதிமீறலிலும் ஈடுபடவில்லை. அவர் மீது 2 குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது. முதலாவதாக, சிறையில் சொந்த உடை அணிந்து வருகிறார் என்று குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. அவர் சாதாரண தண்டனை பெற்று சிறைக்கு சென்றுள்ளார். கடுங்காவல் தண்டனை அளிக்கப்படவில்லை.

    எனவே, கர்நாடக சிறை சட்ட விதியில் சாதாரண தண்டனை பெற்றவர் சொந்த உடையை உடுத்திக் கொள்ளலாம் என்று தெளிவாக கூறப்படுகிறது. ஆனால் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா ‘ஏ’ கிளாஸ் கைதிகளின் சட்ட விதிகளை மட்டும் படித்துவிட்டு, கர்நாடக சிறையின் விதியை படிக்காமல் இப்படி குற்றம் சாட்டுகிறார்.

    2-வது குற்றம் சசிகலா வெளியே சென்று வருவதாக வெளியான வீடியோ. அது வெளியே சென்று வரும் வீடியோ இல்லை. சிறைக்குள் பார்வையாளர்களை சந்தித்துவிட்டு செல்லும் வழி. எனவே வெளியான வீடியோவில் வரும் காட்சி அவர் என்னை சந்தித்துவிட்டு வழக்கு சம்பந்தமான ஆவணங்களை வாங்கிக் கொண்டு சிறைக்குள் செல்கிறார். ஆனால் இந்த வீடியோவை வேண்டுமென்றே தவறாக யாரோ ஒருவருடைய தூண்டுதலின்பேரில் வெளியிட்டு உள்ளனர். இது பொய்யான வீடியோவாகும்.

    மேலும், அதிகாரி ரூபா வேண்டுமென்றே அரசு அதிகாரிகள் வரம்பை மீறி செயல்படுகிறார். மீடியாவை சந்திக்கிறார். அரசியல்வாதிகளுடன் செல்பி எடுத்துக் கொள்கிறார்.

    ரூபா மீது நாங்கள் அவதூறு வழக்கு தொடர உள்ளோம். அவர் யார் தூண்டுதலின்பேரில் செயல்படுகிறார் என்றும் எங்களுக்கு தெரியும். அதனை நாங்கள் நேரம் வரும்போது வெளியிடுவோம். அரசிடம் இருந்து அறிக்கையும் இன்னும் எங்கள் கைக்கு வரவில்லை.

    வீடியோவில் வரும் காட்சி சிறையின் உள்ளே உள்ள காட்சி தான். வெளியே உள்ள கேமராவில் எதுவும் பதிவாகவில்லை. ஏனென்றால் சசிகலா வெளியே செல்லவே இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #Sasikala

    ×